மண்சரிவு,வௌ்ளம் காரணமாக 91 பேர் உயிரிழப்பு: 110 பேரைக் காணவில்லை

மண்சரிவு,வௌ்ளம் காரணமாக 91 பேர் உயிரிழப்பு: 110 பேரைக் காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

26 May, 2017 | 8:14 pm

மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.

களுத்துறை, இரத்தினப்புரி, கேகாலை, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை 110 பேர் காணாமற்போயுள்ளனர்.

28,000 இற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 150 மில்லிமீற்றறிக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இரத்தினப்புரி, களுத்துறை, கொழும்பு மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மண்மேட்டுக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்ப்பட்டுள்ளன.

எஹலியகொட அம்ருவகந்த பகுதியில் உள்ள மலையில் ஏற்பட்ட மண்சரிவில் புதையுடன் ஐந்து வீடுகளில் இருந்த 04 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் மேலும் 10 பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்களை மீட்கும் பணிகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

போபெத்த பகுதியிலும் இன்று மாலை மண்சரிவு பதிவாகியுள்ளது.

இதில் 04 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இதில் காணாமற்போயுள்ள மூன்று பேரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, எஹலியகொட தலாவிட்டிய பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மூன்று பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலத்சிங்கள கொபவக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 8 பேர் காணாமற்போயுள்ளனர்.

காணாமல் போனவர்களில் 04 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் மூன்று பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் பதுரலிய பெல்லன மாவத்த வத்த டெல்கிட்ட தோட்டத்தில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் புதையுண்டன.

வீட்டிலிருந்த 11 பேர் மண்மேட்டில் புதையுண்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

மண்மேட்டில் சிக்குண்டவர்களில் மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போயுள்ளவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

பலத்த மழைக் காரணமாக மதுகம – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த – ஹேயன்துடுவ பகுதியில் வீடொன்றின் மீது மதில் மற்றும் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கடும் மழை காரணமாக கேகாலை தெய்யோவிட்ட பகுதி வௌ்ளத்தால் மூழ்கியுள்ளது.

தெய்யோவிட்ட நகரில் சுமார் 6 அடி உயரம் வரை நீர் நிரம்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

களனி ஆறு பெருக்கெடுத்ததை அடுத்து தெய்யோவிட்ட நகர் நீரில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் அவிசாவளை வீதியிலும் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

தெரணியகலை அவிசாவளை பிரதான வீதி மண்சரிவினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரதான வீதியுடனான போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இன்று காலை அதிகாலை ஹட்டன் ஸ்டெதன் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் குடியிருப்பு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் வீட்டில் இருந்த ஐந்து பேரும் பாதிப்புகளுமின்றி உறவினர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு சந்தி பகுதியில் சிறிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆங்காங்கே பிரதான வீதிகளில் மண்சரிவுகள் ஏற்படுவதனால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பதுளை கொழும்பு புகையிரத பாதையில் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் சிறிய மண்சரிவு ஏற்பட்டதனால் காலை 8 மணியளவில் நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா வரை சென்ற புகையிரதம் தாமதமாகியது.

மேலும் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் வான்பாய்ந்துள்ளது.

லக்ஷ்பான, கெனியன் நீர்தேக்கங்களில் இரண்டு வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும் ஹட்டன் டிக்கோயா ஆற்றில் நீர் பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் அவதானம் வெளியிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்