சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் வௌ்ள அபாயம்

சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் வௌ்ள அபாயம்

சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் வௌ்ள அபாயம்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2017 | 8:59 am

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று 150 மி.மீ வரையிலான மழை வீழச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவபெயர்ச்சி காலநிலை காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் அனேகமான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. பலத்த மழை காரணமாக பல பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

வௌ்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகளில் இராணுவத்தினரும், கடற்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை களனி ஆற்றின் நீர்மட்டம் இன்னும் சில மணித்தியாலங்களில் உயர்வடையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக களனி ஆற்றை அண்மித்து வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

நிலவும் மழையுடனான வானிலையினால் இரத்தினபுரி ,கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடரந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்தும் மழையுடனான வானிலை நீடிக்கும் என்பதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நிறுவகத்தின் மண்சரிவு அபாய முகமைத்துவ எச்சரிக்கை பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார தெரிவித்தார்.

இதேவேளை களுத்துறை – புலத்சிங்கல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாத்தறை தெனியாய மொறவக்க மலைமேட்டில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஹட்டன் ஸ்ரெதன் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் வீடொன்று சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் நோட்டன்பிரிஜ் பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்தததில் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.

இதேவேளை பலத்த மழைக் காரணமாக சப்ரகமுவ மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் மகிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.

ஜிங், நில்வளா, களுகங்கை ஆகியவற்றின் நீர்மட்டங்களும் சடுதியாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்