மான்செஸ்டர் தாக்குதல்தாரிக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: 7 பேர் கைது

மான்செஸ்டர் தாக்குதல்தாரிக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: 7 பேர் கைது

மான்செஸ்டர் தாக்குதல்தாரிக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: 7 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

25 May, 2017 | 5:23 pm

மான்செஸ்டர் நகரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய நபருக்கும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கடந்த திங்கட்கிழமை (22) நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் 58 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி அரியானா கிராண்டேயின் இசை நிகழ்ச்சியின் போதே தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு தாம் தான் காரணம் என டெலிகிராம் செயலி வழியாக ஐ.எஸ். இயக்கத்தினர் அறிவித்தனர்.

ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை. அதேசமயம், தாக்குதலுக்கு காரணமான முக்கிய தற்கொலைப்படை தீவிரவாதியின் அடையாளத்தை பொலிஸார் அறிவித்தனர்.

லிபியாவில் இருந்து சிறுவயதில் அகதியாக இங்கிலாந்து வந்த 22 வயதான சல்மான் அபேதி என்பவர் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர் மான்செஸ்டர் நகரின் பல்வேறு முகவரிகளில் வசித்து வந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தகவல்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் உறுதி செய்தனர். இதையடுத்து, லிபியாவில் இருக்கும் அபேதியின் தந்தை ரமதான் மற்றும் சகோதரர் ஹசீம் ஆகியோரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்தனர். அபேதியின் மூத்த சகோதரர் இஸ்மாயில், மான்செஸ்டரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மத்திய இங்கிலாந்தின் நனீட்டன் நகரில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை ஒரு பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையும் தொடர்ந்து நடைபெறுகிறது.

இதற்கிடையே, மான்செஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அபேதிக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருந்ததாகவும், ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்கும் முக்கிய நபரான ரபேல் ஹாஸ்ட்லிக்கு நெருக்கமாக அபேதி இருந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்