அவுஸ்திரேலியப் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரிபால: மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அவுஸ்திரேலியப் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரிபால: மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து

எழுத்தாளர் Bella Dalima

25 May, 2017 | 3:42 pm

மூன்று நாள் அரச விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்நாட்டின் பிரதமரை சந்தித்துள்ளார்.

கென்பராவில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து தாம் மிக்க மகிழ்ச்சியடைவதாக இதன்போது அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக இலங்கை அரசினால் சிறந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவஸ்ரேலிய பிரதமர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மல்கம் டர்ன்புல்-இற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையில் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி மற்றும் இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், அவுஸ்திரேலிய புவிசரிதவியல் நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய புவிசரிதவியல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் ஜோன்சன் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சோமசுந்தரம் ஸ்கந்தகுமார் ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை சிறுநீரக நோய்த்தடுப்பு ஜனாதிபதி செயலகம் மற்றும் அவுஸ்திரேலிய அணு ஆய்வு தொழில்நுட்ப அமைப்புகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் அணு ஆய்வு தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அட்ரியன் ஃபெடர்ஷன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சோமசுந்தரம் ஸ்கந்தகுமார் ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலிய ஆளுநரை சந்திக்கச் சென்றார்.

ஆளுநரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது இராணுவ மரியாதை செலுத்தப்பட்டதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கௌரவமளிக்கும் வகையில் 21 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்