73 ஆவது பிரெட்பி கேடயம்: முதற்கட்டத்தில் ரோயல் கல்லூரி அணி வெற்றி

73 ஆவது பிரெட்பி கேடயம்: முதற்கட்டத்தில் ரோயல் கல்லூரி அணி வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2017 | 7:46 pm

இலங்கை பாடசாலைகளுக்கான ரக்பி வரலாற்றில் அதிபிரசித்தி பெற்ற கொழும்பு ரோயல் மற்றும் கண்டி திரித்துவக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 73 ஆவது பிரெட்பி கேடயத்தின் முதற்கட்டத்தில் ரோயல் கல்லூரி அணி வெற்றியீட்டியது.

இதன் மூலம் அகில இலங்கை பாடசாலைகள் ரக்பி லீக் பட்டத்தையும் ரோயல் கல்லூரி அணி உறுதி செய்தது.

கண்டி திரித்துவ மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரி அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டி, ஒரு நாள் போட்டியாக 1920 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி ஆரம்பமானது.

பின்னர் இரண்டு கட்டங்களைக் கொண்ட போட்டியாக மாறிய பிரெட்பி கேடயம், 73 ஆவது தடவையாக இம்முறை நடைபெறுகிறது.

கண்டி – பல்லேகெலே மைதானத்தில் இன்று மாலை நடைபெற்ற முதற்கட்டத்தில் ரோயல் கல்லூரி அணி 10-5 எனும் புள்ளிகள் கணக்கில் முதல் பகுதி ஆட்டத்தில் முன்னிலை வகித்தது.

இரண்டாம் கட்டத்தில் இரண்டு அணிகளும் தலா 12 புள்ளிகளை சுவீகரித்தன.

அதற்கமைய, 22-17 எனும் புள்ளிகள் கணக்கில் ரோயல் கல்லூரி அணி முதல் கட்டத்தை தன்வசப்படுத்தியது.

பிரெட்பி கேடய ரக்பி போட்டியின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதி கொழும்பு ரோயல் கல்லூரியின் விளையாட்டுத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

பிரெட்பி கேடய வரலாற்றில் இதுவரை திரித்துவ அணி 39 தடவைகளும், ரோயல் அணி 31 தடவைகளும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்