வெள்ளவத்தையில் சரிந்து வீழ்ந்த கட்டிட இடிபாடுகளிலிருந்து சடலம் மீட்பு

வெள்ளவத்தையில் சரிந்து வீழ்ந்த கட்டிட இடிபாடுகளிலிருந்து சடலம் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2017 | 4:35 pm

வெள்ளவத்தை பகுதியில் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டது.

கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 25 பேர் காயமடைந்ததுடன், இருவர் காணாமற்போயிருந்தனர்.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி காணாமற்போனவர்களின் உறவினர்கள், சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்ததுடன், மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படாமை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டது.

இதனை அடுத்து விசேட செயற்பாடுகள் மூலம் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன் விளைவாக இன்று பிற்பகல் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஹட்டன் பகுதியைச் சேர்ந்த இளைஞரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதுடன், களுபோவில போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

முன்னதாக, ஹசல பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளவத்தையிலுள்ள திரையரங்கொன்றிக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ஐந்து மாடிக் கட்டிடம் கடந்த 18 ஆம் திகதி சரிந்து வீழ்ந்தது.

உடனடியாக மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவத்தில் காயமடைந்த 25 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சரிந்து வீழ்ந்த கட்டிடம் சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்பட்டது எனவும் அதன் உரிமையாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் கொழும்பு மாநகர ஆணையாளர் வீ.கே.அனுர நேற்று தெரிவித்தார்.

இயற்கை கால்வாய்க்கு அருகில் இவ்வாறான கட்டிடங்களுக்கு கட்டாயமாக அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் கால்வாய் ஓரம் வரை அனுமதியின்றி கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்