பளையில் பொலிஸாரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம்: விரிவான விசாரணைகள் ஆரம்பம்

பளையில் பொலிஸாரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம்: விரிவான விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

19 May, 2017 | 9:13 pm

கிளிநொச்சி – பளை பகுதியில் நேற்றிரவு (18) பொலிஸாரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பளை – கச்சார்வெளி பகுதியில் பொலிஸ் ரோந்து சேவை வாகனமொன்றை இலக்குவைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.

குறித்த வாகனம் தினமும் இரவு வேளையில் இரணைமடு மற்றும் முகமாலை பகுதிகளுக்கு இடையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்றபோது வாகனத்தில் நான்கு பொலிஸார் இருந்தபோதிலும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

வாகனத்திற்கும் சேதம் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

ரி-56 ரக துப்பாக்கியால் மூன்று தடவைகள் சுடப்பட்டுள்ளதுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது துப்பாக்கியின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் கைவிரல் அடையாளங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த பகுதியில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் மோப்ப நாய்களும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, பளை பகுதியில் தொடர்ந்தும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்