பாரதப் பிரதமரின் விஜயத்தால் தோட்டத் தொழிலாளர்களின் கூடையில் நிறைந்தது என்ன?

பாரதப் பிரதமரின் விஜயத்தால் தோட்டத் தொழிலாளர்களின் கூடையில் நிறைந்தது என்ன?

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2017 | 8:24 pm

பாரதப் பிரதமரின் மலையக விஜயம் அரசியல் அரங்கை மாத்திரமல்லாது மலையக மக்களின் வாழ்க்கையிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாக தேர்தல்கோலம் பூண்டிருந்த ஹட்டன் நகர் இன்று வழமைக்கு திரும்பியுள்ளது.

சுவரொட்டிகள், பிரம்மாண்டமான பதாகைகள், வர்ணக்கொடிகள் ஆகியன தேர்தல் களத்தை மீண்டும் நினைவூட்டிச் சென்றன.

ஆயினும், இவையனைத்தும் வாக்குறுதியளித்து வாக்குப்பெற்று மறையும் தேர்தலுக்காகவல்ல.

பாரதப் பிரதமரை வரவேற்கவும், தமது அரசியல் கட்சியின்பால் மோடியின் கவனத்தை ஈர்க்கவும் கனகச்சிதமாக அரங்கேற்றப்பட்ட நாடகங்களே இவை.

நோர்வூட்டில் இடம்பெற்ற வீதி மறிப்பும், தகாத வார்த்தைப் பிரயோகமும் மலையகத் தலைமைகளை கூனிக்குறுகவே செய்ததன்றி, தலை நிமிரவா செய்தது?

தேயிலைச்செடி பறித்துக் கூனிப்போன தோட்டத்தொழிலாளர்களின் கூடையில் இறுதியில் நிறைந்தது தான் என்ன?

விருந்தோம்பல் பண்பைப் பறைசாற்றுவதற்காய், விழாவுக்கான ஏற்பாடுகளிலும் பிரசாரங்களிலும் தீவிரம் காட்டிய அரசியல் தலைமைகள் பாராட்டப்படட்டும்.

ஆனாலும், டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பெயர்ப்பலகையில் தமிழ் மெல்லச் செத்திருப்பதையும் சற்று அவதானித்திருக்க வேண்டாமா?

பிரதமர் மோடியின் வருகையினால், குன்றும் குழியுமான வீதிகள் அவசர அவசரமாக புனரமைக்கப்பட்டு மறுவடிவம் பெற்றன.

வெளிநாட்டுத் தலைவரிடம் நன்மதிப்புப்பெறும் முனைப்பை, மலையக மக்கள் இன்றும் நடந்தே பயணம் செய்யும் ஏனைய வீதிகளை செப்பனிடுவதிலும் காட்ட வேண்டும் என்பதே மக்களின் அங்கலாய்ப்பு.

இரத்தம் உறிஞ்சும் அட்டைகள், தினந்தோறும் தாக்கும் குளவிகள் இவற்றுக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இசைவாக்கமடைந்திருக்கிறார்கள்.

மக்கள் அவதியுற்றபோது அகற்றப்படாத குளவிக்கூடுகள், பாரதப் பிரதமரின் விஜயத்தால் வெகுவிரைவாகக் கலைக்கப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டர்களில் இருந்து வெளியேறிய காற்றுக்குக்கூட தாக்குப்பிடிக்காத குடியிருப்புக்கூரைகள், மறைக்கப்பட்டிருக்கும் மலையக மக்களின் வாழ்வியலின் அவலத்தை தெளிவாகக் காட்டியிருக்கிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

வாகனப் போக்குவரத்தையே கண்டிராத மலையகத்தின் சில வீதிகளில் நேற்று முழுவதும் மக்களை ஏற்றிச்செல்வதற்கான இலவச பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.

வெளிநாட்டுத் தலைவர்களின் வருகையால் தலைநகரில் குறுநேரப் பயணமும் நெடுநேரப் பயணமாவது வழமை.

ஆனால், இம்முறை மலையகத்தின் முக்கிய நகரங்கள் சிலவற்றையும் இந்த நிலைமை ஆக்கிரமித்திருந்ததுடன், பொதுப்போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்தன.

ஏனைய தேவைகளுக்காக செல்லும் மக்கள், பஸ்கள் சேவையில் ஈடுபடாததால் நேற்றைய தினம் முழுவதும் அசௌகரியத்தை எதிர்நோக்கியதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இவர்களுக்கான மாற்றுத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படாமைக்கு பொறுப்புக்கூறுவது யார்?

அரசியல்வாதிகளின் போட்டிக்கு மத்தியில் பாரதப் பிரதமரின் கவனத்தை ஈர்த்தது யார்?

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்