பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு: விசாரணைகள் ஆரம்பம்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு: விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

10 May, 2017 | 9:00 pm

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு உத்தியோகத்தர்களை இலக்கு வைத்து நேற்று (09) நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்த தெரிவித்தார்.

நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு பொலிஸாரும், மூன்று சிறுவர்களும் காயமடைந்துள்ளனர்.

மொரட்டுவையில் இருந்து பிலியந்தலை வரையான வீதியின் பிலியந்தலை சந்திக்கு 100 மீற்றர் தூரத்தில் நேற்றிரவு 8.45 அளவில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.

போதைப்பொருள் சுற்றிவளைப்பை மேற்கொள்வதற்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பயணித்த காரைப் பின்தொடர்ந்த ஆயுதம் தாங்கிய மோட்டார் சைக்கிள் குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காரை செலுத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பணியக பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்ததுடன், சுற்றிவளைப்பை வழி நடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ, மேலுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலையிலும், மார்புப் பகுதியிலும் துப்பாக்கிச்சூடு பட்டதால் பலத்த காயங்களுக்கு உள்ளான இன்ஸ்பெக்டர் ரங்கஜீவ, அவசர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் காரைத் தவிர வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன், மேலும் இரண்டு கார்கள், முச்சக்கரவண்டி ஆகியவற்றுக்கும் துப்பாக்கிச்சூடு பட்டிருந்தது.

முச்சக்கரவண்டி சாரதி, அருகாமையில் ஹோட்டல் ஒன்றினுள் இருந்த 11 மற்றும் 8 வயதான இரண்டு சிறுமிகள், 15 வயதான சிறுவன் ஆகியோரும் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவர்கள் ஹோட்டல் உரிமையாளரின் பிள்ளைகளாவர்.

இந்த பிள்ளைகளில் 11 வயதான சிறுமியின் நிலைமை சற்று பாரதூரமாக உள்ளதென வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பாக பொலிஸ் குழுக்கள் சில ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், ஆயுததாரிகள் வந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள், மஹரகம பகுதியில் குறுக்கு வீதியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும், போதைப்பொருள் சுற்றிவளைப்பை வழிநடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ, கடந்த காலப்பகுதி முழுவதும் நாட்டில் போதைப்பொருள் ஒழிப்புக்காக தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்கிய ஒரு அதிகாரியாவார்.

2011 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில், கொழும்பிற்கு போதைப்பொருள் விநியோகத்தை மேற்கொண்ட கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர், 400 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதுடன், ஹங்வெல்ல பகுதியில் போதைப்பொருள் களஞ்சியமொன்றையும் பொலிஸார் சுற்றிவளைத்தனர்.

அண்மைக்காலத்தில் கடலில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயின் எனக் கூறப்படும் 100 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிவாய்ந்த 101 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள், தென்பகுதி கடலில் கடந்த வருடம் மார்ச் மாதம் 30 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட நடவடிக்கைக்கும் இன்ஸ்பெக்டர் ரங்கஜீவ பெரும் பங்காற்றியிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்