இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை வருகிறார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை வருகிறார்

எழுத்தாளர் Bella Dalima

10 May, 2017 | 8:44 pm

சர்வதேச வெசாக் தின வைபவத்தில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (11) மாலை இலங்கை வருகை தரவுள்ளார்.

சர்வதேச வெசாக் தின வைபவத்தின் ஆரம்ப நிகழ்வு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

அங்கு நடைபெறும் அன்னதான நிகழ்வில் பங்கேற்கவுள்ள இந்தியப் பிரதமர், ஐக்கிய நாடுகளின் வெசாக் நிகழ்வை முன்னிட்டு நினைவு முத்திரையொன்றையும் வெளியிட்டு வைக்கவுள்ளார்.

13 ஆம் திகதி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கண்டியில் நடைபெறும் இறுதி நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.

இதன்போது கண்டி பிரகடனம் வெளியிடப்படவுள்ளது.

தமது இலங்கை விஜயத்தின் போது, ஹட்டன் – டிக்கோயா வைத்தியசாலையின் புதிய கட்டடத்தொகுதியை திறந்து வைக்கவுள்ள இந்தியப் பிரதமர், அதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

நரேந்திர மோடியின் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்த பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்திய விமானப்படையின் இரண்டு ஹெலிகொப்டர்களும் நாட்டிற்கு வந்துள்ளன.

ஹட்டனில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிகழ்வின் ஆயத்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் இன்று அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்