வித்தியா கொலை வழக்கை மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது

வித்தியா கொலை வழக்கை மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2017 | 8:35 pm

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பில் ஜூரி சபை அல்லாத மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணை செய்வதற்கு சட்ட மா அதிபர், பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

9 சந்தேகநபர்களுக்கு எதிராக 41 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை, சட்டவிரோதமாக ஒன்று கூடல் ஆகிய குற்றச்சாட்டுகளும் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 7 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.

சந்தேகநபர்களின் பிணை நீடிப்பு தொடர்பான வழக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இதன்போது 4, 7 மற்றும் 9 ஆம் இலக்க சந்தேகநபர்கள் பிணை கோரியிருந்தனர்.

எனினும், சம்பவம் தொடர்பில் விசாரணை நிறைவு செய்யப்படும் நிலையில் உள்ளதாகவும் குற்றப்பத்திரிக்கை எதிர்வரும் 7 நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்து சட்ட மா அதிபர் திணைக்களத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி எதிர்வரும் 22 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்