நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதத்தால் அதிகரிப்பு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதத்தால் அதிகரிப்பு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதத்தால் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2017 | 7:19 pm

நாட்டில் கடந்த வருடம் 4.4 வீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக 2016 ஆம் ஆண்டிற்கான மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் 4.8 எட்டு வீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கி அறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் வெளிப்படுத்தப்படும் புதிய விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தும் மாநாடு கொழும்பில் நேற்று (04) நடைபெற்றது.

இதன்போது, அரச துறையின் பாரிய அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் போல், தனியார் துறையினரின் முதலீடுகள் காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி யூதிகா இந்திரத்ன தெளிவுபடுத்தினார்.

மேலும், நாட்டில் நிலவிய வறட்சி காரணமாக விவசாயத்துறையில் குறைந்தளவு வளர்ச்சியே ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடம் விவசாயத்துறையில் 4.2 வீத எதிர்மறை வளர்ச்சி காணப்படுகின்றது.

நெல் உற்பத்தி 8.3 வீதமாகவும் தேயிலை உற்பத்தி 11 வீதமாகவும் ரப்பர் உற்பத்தி 10.7 வீதமாகவும் தெங்கு உற்பத்தி 1.5 வீதமாகவும் குறைவடைந்தமையே இதற்கு பிரதான காரணமாகும்.

தொழிற்துறை 6.7 வீதமாகவும் சேவைத்துறை 4.2 வீதமாகவும் வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் நாட்டில் நிலவிய வறட்சி காரணமாக மின் உற்பத்தி மற்றும் மசகு எண்ணெய் பாவனை 104 வீதமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலைமை காரணமாக இலங்கை மின்சார சபை 13.2 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு 20 பில்லியன் ரூபா நட்டமடைந்த பொற்றோலியக் கூட்டுதாபனம், 2016 ஆம் ஆண்டு 69.6 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நாட்டின் ஏற்றுமதி 2.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இறக்குமதி 2.5 வீதமாக உயர்வடைந்துள்ளது.

வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணி கடந்த வருடம் 3.7
வீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, முதற்தடவையாக கடந்த வருடம் 2 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், அதன் மூலமாக 18 வீத வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நாட்டிற்கு கிடைத்த நேரடி வெளிநாட்டு முதலீட்டின் அளவு, முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்பொழுது குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்