நாடளாவிய ரீதியில் 30 தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் 30 தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2017 | 3:48 pm

தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்புத் தெரிவித்தும் ஏனைய சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் 30 தொழிற்சங்கங்கள் இன்று நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள், அம்பியுலன்ஸ் சேவை, நிறைவு வைத்திய அதிகாரிகளின் 18 சங்கங்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையின் பல தொழிற்சங்கங்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளன.

இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்து, பொற்றோலியம், மின்சாரம், தபால் உள்ளிட்ட மேலும் சில துறைகளைச்
சேர்ந்தவர்களும் உணவு இடைவேளை நேரத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடபட்டனர்.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்பகிஷ்கரிப்பை
முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்தியர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டார்.

தங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தால் சாதகமான பதில் வழங்கப்படவில்லையாயின், நாடளாவிய ரீதியில் தொடர்
போராட்டங்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு இலங்கை தாதியர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், உயிராபத்து மிக்க சந்தர்ப்பங்களில் தாதியர்கள் சேவையில் ஈடுபடுவார்கள் எனவும், தங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான தீர்வை வழங்க வேண்டும் எனவும் இலங்கை தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் காமினி குமாரசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கமும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடபட்டுள்ளன.

ஒருநாள் சுகயீன விடுமுறையில் இன்று ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதனிடையே இன்று நண்பகல் 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்று முன்னெடுக்கப்படவுள்ள அடையாள பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவிக்காத தொழிற்சங்கங்களும் தங்களின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.

தனியார் பஸ் ஊழியர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தவிர ஏனைய காரணங்களுக்காக பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தாம் தயார் இல்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்