மூன்று கால்களுடன் பிறந்த பங்களாதேஷ் சிறுமி:  அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக முடிந்தது அறுவை சிகிச்சை

மூன்று கால்களுடன் பிறந்த பங்களாதேஷ் சிறுமி:  அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக முடிந்தது அறுவை சிகிச்சை

மூன்று கால்களுடன் பிறந்த பங்களாதேஷ் சிறுமி:  அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக முடிந்தது அறுவை சிகிச்சை

எழுத்தாளர் Bella Dalima

02 May, 2017 | 4:29 pm

இடுப்புப் பகுதியுடன் இணைந்தவாறு மூன்றாவது காலுடன் பிறந்த பங்களாதேஷ் சிறுமிக்கு அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை மூலம் மூன்றாவது கால் நீக்கப்பட்டு, அச்சிறுமி பெற்றோருடன் மீண்டும் பங்களாதேஷ் திரும்பியுள்ளார்.

மூன்று வயதாகும் சோய்டி கதூன் எனும் சிறுமி பிறப்பிலேயே இடுப்பெலும்பில் இரட்டைப் பகுதிகள் கொண்டவர்.

சோய்டி கதூனின் கூடுதல் உறுப்பை அகற்றுவது மற்றும் இடுப்பு மண்டலத்தை மறுகட்டமைப்பது குறித்து அவுஸ்திரேலிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல மாதங்களாக ஆலோசனை நடத்தினர்.

”சில்ட்ரன் ஃபர்ஸ்ட் ஃபவுண்டேஷன்” என்னும் அறக்கட்டளை, வங்கதேசத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமியை, சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்றது.

சோய்டி கதூனுக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மிகவும் அரிதானதாகவும் கடினமானதாகவும் இருந்ததாக, விக்டோரியா நகரில் உள்ள மோனாஷ் சிறார் மருத்துவமனையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர் கிரிஸ் கிம்பெர் குறிப்பிட்டுள்ளார்.

சோய்டி கதூனுக்கு இதற்கு முன் சில அறுவை சிகிச்சைகளை செய்திருந்த பங்களாதேஷ் மருத்துவர்களுடன் அவுஸ்திரேலிய மருத்துவர் குழு விரிவான கலந்தாலோசனைகளை மேற்கொண்டது.

சோய்டியை கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்வதற்கு முன்னதாக, அவருக்கு செய்யக்கூடிய அறுவை சிகிச்சை சாத்தியமானதா, பயனுள்ளதா என மருத்துவக் குழு தீர்மானிக்க வேண்டியிருந்தது.

சோய்டியின் மூன்றாவது காலின் ஒரு பகுதியை பங்களாதேஷ் மருத்துவர்கள் அகற்றினாலும், “இரண்டு சாதாரண கால்களுக்கு இடையில் அவரது இடுப்புப்பகுதியில் ஒரு பெரிய பகுதி இருந்தது” என்று மருத்துவர் கிம்பெர் கூறினார்.

“ஏனெனில் அங்கு இரட்டைப் பகுதி உள்ளது, சோய்டிக்கு இரண்டு மலக்குடல், இரண்டு பெண் குறிகள் இருந்ததுடன், இரண்டு மலவாய்களுக்கான சாத்தியங்களும் இருந்தன. இந்த இரட்டைப் பகுதிகள், வழக்கத்திற்கு மாறான இடத்தில் வளர்ந்து கொண்டிருந்தன.”

மருத்துவக் குழுவினரின், கவனமான மிக நீண்ட திட்டமிடலுக்குப் பிறகு நவம்பர் மாதம் அறுவை சிகிச்சை நடந்தேறியது.

சிறுமியின் உடலில் இருந்த மூன்றாம் காலின் எஞ்சிய பகுதியை அகற்றிய மருத்துவக் குழுவினர், சோய்டி வீட்டிற்கு திரும்பியதும், இயல்பாக இயங்குவதை உறுதி செய்யும் வகையில் மறுகட்டமைப்பு சிகிச்சைகளையும் மேற்கொண்டார்கள்.

பகுதியளவு பார்வை குறைபாடுள்ள சோய்டி கதூனால், தற்போது நடக்கவும், ஓடவும் முடிகிறது என்று சொல்லும் மருத்துவர் கிம்பெர், அவரின் எடையும் கூடியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பதின்ம வயதில் கதூனுக்கு மேலும் சில அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கலாம் என்று கூறியுள்ள அவர், தற்போது எந்தவித மருந்தோ, மருத்துவ உபகரணங்களோ இல்லாமல் தனது தாயுடன் தாயகத்திற்கு அவர் திரும்ப முடிந்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்