பேசுபொருளாகியுள்ள மோடியின் உத்தேச மலையக விஜயம்: பலத்தை நிரூபிக்க முயலும் அரசியல் கட்சிகள்

பேசுபொருளாகியுள்ள மோடியின் உத்தேச மலையக விஜயம்: பலத்தை நிரூபிக்க முயலும் அரசியல் கட்சிகள்

எழுத்தாளர் Bella Dalima

02 May, 2017 | 8:18 pm

ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் விழா இம்மாதம் 12 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்விற்காக இலங்கைக்கு வருகை தரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மலையகத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது எதிர்வரும் 12 ஆம் திகதி நரேந்திர மோடி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை கட்டடத் தொகுதியை திறந்து வைக்கவுள்ளார்.

47.27 கோடி இந்திய ரூபா செலவில் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பல வருடங்கள் கடந்த நிலையில், மலையக அரசியல் தலைவர்களின் அதிகாரப் போட்டி காரணமாக நோயாளர்கள் அதனை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எவ்வாறாயினும், இந்தக் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதி இயங்கி வருகிறது.

இந்நிலையில், இந்தியப் பிரதமரின் மலையக விஜயத்தை அரசியல்மயமாக்கி, தமது பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் மலையக அரசியல் தலைவர்கள் தீவிரம் காட்டுகின்றனர்.

வைத்தியசாலைக் கட்டடத் தொகுதி திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், மத்திய மாகாண முதலமைச்சருடன் கிளங்கன் வைத்தியசாலைக்கு கடந்த 26 ஆம் திகதி சென்றிருந்தனர்.

நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் பாரதப் பிரதமர் விசேட உரை நிகழ்த்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், ஹட்டனில் இருந்து நோர்வூட் நகரத்திற்கு செல்லும் வீதியை கார்பட் இட்டு செப்பனிடும் பணிகள் தற்போது துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

இந்த வீதியின் புனரமைப்புப் பணிகளில் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஈடுபாடு காட்டுவதை அவதானிக்க முடிந்தது.

தொழிலாளர்களின் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டிய மே தினத்தில், மலையக அரசியல் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக நேற்று பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தியிருந்தன.

இந்தக் கூட்டங்களிலும் நரேந்திர மோடியின் மலையக விஜயம் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்