மாசிடோனியா பாராளுமன்றினுள் நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல்; 77 பேர் காயம்

மாசிடோனியா பாராளுமன்றினுள் நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல்; 77 பேர் காயம்

மாசிடோனியா பாராளுமன்றினுள் நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல்; 77 பேர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

29 Apr, 2017 | 5:57 pm

மாசிடோனியா பாராளுமன்றத்தினுள் நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாவலர்கள் உட்பட 77 பேர் காயமடைந்துள்ளனர்.

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள மாசிடோனியா நாட்டில் இனக்கலவரம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. அந்நாட்டின் மக்கட்தொகையில் 64 சதவீதம் பேர் மாசிடோனியர்கள், 25 சதவீதம் பேர் அல்பேனியர்கள்.

அங்கு மாசிடோனியா புரட்சிகரக் கட்சியும் ஐக்கிய மாசிடோனியா ஜனநாயகக் கட்சியும் இணைந்து சுமார் 10 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நடத்தின.

கடந்த டிசம்பரில் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கூட்டணி உட்பட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து முக்கிய எதிர்க்கட்சியான மாசிடோனியா ஐக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோரன், அல்பேனிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், அதிபர் ஜார்ஜ் இவானோவ் ஆட்சி அமைக்க அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை.

இதனால் மாசிடோனியாவில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. புதிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று மாசிடோனியர்களும் அல்பேனியர்களும் தனித்தனியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை மாசிடோனியா நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அல்பேனிய இனத்தைச் சேர்ந்த ஹாபெரி என்பவர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாசிடோனியா இனத்தைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தில் திடீரென புகுந்து அல்பேனிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் ஜோரன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாவலர்கள் 77 பேர் காயமடைந்தனர்.

இதே நிலை நீடித்தால் இனப்பிரச்சினை காரணமாக மாசிடோனியா இரண்டாக உடையக்கூடும் என அரசியல் அவதானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்