வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால்: அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் ஆதரவு

வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால்: அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் ஆதரவு

எழுத்தாளர் Bella Dalima

27 Apr, 2017 | 9:59 pm

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நீதியை நிலைநாட்டுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த ஹர்த்தாலுக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.

ஹர்த்தாலினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பித்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக A9 வீதியை மறித்து சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சிறிது நேரம் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது.

இதேவேளை, காணாமலாக்கப்பட்டோரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக 67 ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், வவுனியா மாவட்டத்திலிருந்து தென்பகுதிக்கான பஸ்கள் சேவையில் ஈடுபட்டிருந்த போதும் வட பகுதிக்கான சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது.

வங்கிகள், அரச திணைக்களங்கள் வழமைபோல் இயங்கியதுடன் மக்களின் வருகை மந்தகதியில் இருந்தது.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களினால் வவுனியா பகுதியில் ஏ9 வீதியை மறித்து சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 8.30 மணியிலிருந்து 9.30 மணிவரை வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 63 ஆவது நாளாகவும் வவுனியாவில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். மாவட்டத்திலும் ஹர்த்தால் காரணமாக அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன், மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக 44 ஆவது நாளாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டம் ஹர்த்தால் காரணமாக வெறிச்சோடிக் காணப்பட்டது.

வங்கிகள், அரச திணைக்களங்கள் திறக்கப்பட்டிருந்த போதிலும், மக்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தரவில்லை எனவும் தூர இடங்களில் இருந்து வருகை தரும் அரச ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.

ஹர்த்தாலினால் மன்னார் மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததாகவும், உணவுக்கடைகள் வழமைபோல் இயங்கியதாகவும் நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை எனவும் அரச பஸ்கள் சேவையில் ஈடுபட்டதாகவும் அரச திணைக்களங்கள் திறந்திருந்தபோதிலும் மக்கள் செல்லவில்லை எனவும் பிராந்திய செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் ஹர்த்தாலினால் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாகவும் பாடசாலைகளுக்கு ஆசிர்யர்கள் சமூகமளித்திருந்த போதிலும் மாணவர்கள் சமூகமளிக்கவில்லை எனவும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், அரச திணைக்களங்களுக்கு அதிகாரிகள் சமூகமளித்திருந்த போதிலும் மக்கள் வரவில்லை என செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், அக்கரைப்பற்று மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

திருகோணமலையிலும் ஹர்த்தால் காரணமாக வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாகவும், போக்குவரத்துக்கள் ஸ்தம்பித்திருந்ததாகவும் எமது பிரா்ந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்