கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை சமச்சீர் நன்மைகளைப் பெறுவதற்கான அடிப்படை ஆவணம்: சுஷ்மா சுவராஜ்

கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை சமச்சீர் நன்மைகளைப் பெறுவதற்கான அடிப்படை ஆவணம்: சுஷ்மா சுவராஜ்

எழுத்தாளர் Bella Dalima

27 Apr, 2017 | 7:45 pm

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை, இரு நாட்டு மக்களும் சமச்சீர் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை ஆவணம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையூடாக பல்வேறு துறைகளில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வை எட்டமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று (26) மாலை கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியா, இலங்கை, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்து செயற்படுவதற்கான பல சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மூன்றாண்டுகளில் படிப்படியாக அனைத்து மீனவர்களையும் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

இதுதவிர, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விசைப் படகுகளுக்கான பதிவுகளை இடைநிறுத்தியுள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்

இதேவேளை, இந்திய உள்துறை அலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு புது டெல்லியில் இடம்பெற்றது.

இலங்கையின் பொலிஸ் சேவையை நவீனமயப்படுத்தும் போது, இந்தியாவின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் – மன்னார் – திருகோணமலை நெடுஞ்சாலை, தம்புள்ளை – திருகோணமலை அதிவேக வீதி உள்ளிட்ட இலங்கையில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் பூரண உதவி வழங்கப்படும் என அமைச்சர் நிதின் கட்கார் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைக் கேந்திரப்படுத்தி முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி செயற்பாடுகளூடாக வடக்கின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான பின்புலத்தைத் திட்டமிடுவது குறித்தும் இரு நாடுகளிடையிலும் கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்