மோடியை சந்தித்தார் ரணில்: புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

மோடியை சந்தித்தார் ரணில்: புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2017 | 9:16 pm

இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையிலான சந்திப்பு புது டில்லியில் இன்று நடைபெற்றது.

இதன்போது வலய நாடுகளின் பாதுகாப்பு, இந்து சமுத்திர ஒழுங்கு விதிகள், சுதந்திர கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படல் ஆகியன தொடர்பில் இருநாட்டுப் பிரதமர்களுக்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இந்து சமுத்திர வர்த்தக, பொருளாதார, சமூக மற்றும் நிதி நிலமைகளை உறுதிப்படுத்தும் இலங்கையின் இலக்கை எட்டுவதற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கும் என இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உறுதியான இலங்கையை உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான நல்லாட்சி இணக்க அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு உயர்மட்ட ஒத்துழைப்பு வழங்குவதாக இரு தரப்பு கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய நிதியுதவியில் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்தியா சார்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கை சார்பில் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றிலும் கைச்சாத்திட்டுள்ளனர்.

திரவ வாயு உற்பத்தி, சூரிய மின் உற்பத்தி நிலையத்தை ஸ்தாபித்தல், திருகோணமலை நகரம் – துறைமுகம் – பொருளாதார வலய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, ரயில் சேவையை நவீனமயப்படுத்தல், விவசாயம், விலங்கு உற்பத்தி, நீர் முகாமைத்துவம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சில துறைகளின் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஜப்பான், இந்தியா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்