முச்சக்கரவண்டி சாரதி மீது தாக்குதல்: கைதான மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் பிணையில் விடுதலை

முச்சக்கரவண்டி சாரதி மீது தாக்குதல்: கைதான மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் பிணையில் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2017 | 9:59 pm

லிந்துலை – மெராயா நகரில் முச்சக்கரவண்டி சாரதி மீது தாக்குதல் மேற்கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரான மாகாண சபை உறுப்பினர் இன்று பகல் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மெராயா நகரில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் தாக்கியதாகத் தெரிவித்து இன்று முற்பகல் சிலர் மாகாண சபை உறுப்பினரின் வீட்டருகே திரண்டிருந்தனர்.

இதனால் மெராயா நகரில் இன்று முற்பகல் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

முச்சக்கரவண்டு சாரதி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பிரதேச மக்கள் இதன்போது எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றுகூடியதை அடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாகாண சபை உறுப்பினர் பி. சக்திவேல் எல்ஜியன் – மெராயா பிரதான வீதியில் அமர்ந்திருந்தார்.

எவ்வாறாயினும், பொலிஸ் பாதுகாப்புடன் மாகாண சபை உறுப்பினர் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மாகாண சபை உறுப்பினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினரை 5000 ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்க நீதவான் இந்திக்க டி சில்வா உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மாகாண சபை உறுப்பினருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்