தந்தை செல்வாவின் 40 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு

தந்தை செல்வாவின் 40 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Apr, 2017 | 1:27 pm

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 40 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

நினைவு சதுக்கத்திலுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இதன்போது மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், எஸ்.சிவமோகன், தருமலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா நகரிலுள்ள தந்தை செல்வா உருவச்சிலைக்கு அருகிலும் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இதன்போது, மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வா பற்றி…

‘தந்தை செல்வா’ என அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் இலங்கை தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத தலைவராவார்.

மார்ச் 31 ஆம் திகதி 1898 இல் மலேசியாவில் பிறந்த செல்வநாயகம், ‘ஈழத்து காந்தி’ என உலகத் தமிழர்களால் போற்றப்படுகின்றார்.

யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, பரியோவான் கல்லூரிகளில், பழைய மாணவரான இவர் இலங்கை சட்டக் கல்லூரியிலும் லண்டன் பல்கலைக்கழகத்திலும் சட்டத்துறையில் பட்டம் பெற்றார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் அங்கம் வகித்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம், இலங்கையின் முதல் இனத்துவ அடையாளக் கட்சியான தமிழ் அரசுக் கட்சியை ஸ்தாபித்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு கூட்டாட்சியை வலியுறுத்திய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்திருந்தார்.

ஒப்பந்தங்களும் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்து இனப்பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் தனிநாட்டு தீர்வை அவர் முன்வைத்தார்.

இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம், இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்கள் மனங்களில் ‘தந்தை செல்வா’ என்னும் நாமத்துடன் இன்றும் நிலைத்திருக்கிறார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்