வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தமிழ் கைதி தாக்கப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணிகள் அறிக்கை

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தமிழ் கைதி தாக்கப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணிகள் அறிக்கை

எழுத்தாளர் Bella Dalima

25 Apr, 2017 | 8:11 pm

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ் அரசியல் கைதியொருவர் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் பிரகாரம், அந்த கைதியை சந்திப்பதற்காக சட்டத்தரணிகள் சிலர் நேற்று (24) சிறைச்சாலை சென்றனர்.

நிலைமையைக் கண்காணிப்பதற்காக சிறைச்சாலை சென்றிருந்த சட்டத்தரணிகள் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த கைதி, கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிகாலை 1.30 அளவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கடும் நோய்வாய்ப்பட்டிருந்த கைதியை, வைத்தியசாலை கட்டிலில் இருந்து சிறைக்கூடத்திற்கு நகருமாறு பணித்துள்ளதாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், வைத்தியரின் ஆலோசனைப்படியே தாம் வைத்தியசாலையின் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கைதி சிறை அதிகாரியிடம் எடுத்துக்கூறியுள்ளார்.

இதனையடுத்து, கைதியை தகாத வார்த்தைகளால் திட்டிய சிறை அதிகாரி அவரை சிறைக்கூடப் பிரிவிற்கு நகருமாறு கட்டளையிட்டதுடன், மேலும் சில அதிகாரிகளும் இணைந்து கைதியை சிறைக்கூடப் பிரிவிற்கு பலவந்தமாக மாற்றியுள்ளதாக சட்டத்தரணிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தனியான வைத்தியசாலை வசதிகளை ஏற்படுத்துவதற்கும் வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாகக் கைதிகளை உடனடியாக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கும் நோய்வாய்ப்படும் கைதிகளுக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சட்டத்தரணிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு நியூஸ்பெஸ்ட் வினவியது.

குறிப்பிட்ட கைதி தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலக பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது விசேட கண்காணிப்பு செலுத்தப்படுவதன் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையின் சிறைக்கூட வைத்திய பிரிவில் அனுமதிப்பதே வழமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சம்பந்தப்பட்ட கைதி இதற்கு மறுப்புத் தெரிவித்ததை அடுத்து, அவரை சிறைக்கூட வைத்திய பிரிவிற்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்