தடைப்பட்டிருந்த எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்கு

தடைப்பட்டிருந்த எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்கு

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2017 | 9:05 am

பெற்றோலிய தொழிற் சங்கங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தடைப்பட்டிருந்த எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பெற்றோலிய அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று (25) பகல் அளவில் சீராக முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலிய ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்குவது தொடர்பில், பிரதமரின் செயலாளரினால் எழுத்துமூலம் வாக்குறுதி வழங்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பெற்றோலிய துறை தொடர்பாக இந்தியாவுடன் முன்னெடுக்கப்படும் உடன்படிக்கை அரசியல் ரீதியானது என்றும், அதுதொடர்பான உடன்படிக்கையில் ஈடுபட முன்னர் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய தரப்புகளுடன் கலந்துரையாடப்படும் எனவும் பிரதமரின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை களஞ்சிய தொகுதி சம்பந்தமாகவும் தொழிற் சங்கங்களின் யோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடலை நடத்துவதற்கும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் அமைச்சரவை உபகுழுவுடன் பேச்சுவார்தை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு பணிகளை நவீன மயப்படுத்துவதற்கும் பொருளாதார குழுவிற்கு தம்மால் யோசனை முன்வைப்பதற்கும் காரணங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிப்பதாக பிரதமரின் செயலாளரால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டதன் பேரில், தமது பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிடுவதற்கு தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

இதேவேளை, தமது கோரிக்கைகள் தொடர்பில் நேற்று (24) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைத்ததாக இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் உபதலைவர் பிரேமந்த கமகே குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்