விமல் வீரவன்சவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு  உத்தரவு

விமல் வீரவன்சவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு  உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2017 | 8:09 pm

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார, கறுவாத்தோட்ட பொலிஸாருக்கு இன்று உத்தரவிட்டார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரது இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியமை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி கொழும்பு 7, பௌத்தாலோக்க மாவத்தை மற்றும் ஹெவ்லொக் வீதியை மறித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, கறுவாத்தோட்ட பொலிஸாரால் பி அறிக்கை மூலம் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த வழக்கின் சந்தேகநபர்களான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திசாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, ரொஜர் செனவிரத்ன மற்றும் மொஹமட் முசம்மில் ஆகிய ஆறு பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஒலிவாங்கி பொருத்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளரான சமிந்த ஜயலால் என்ற ஏழாவது சந்தேகநபர், தனது வதிவிடத்தில் தற்போது இல்லையென்பதால், அவரின் வசிப்பிடத்தை கண்டுபிடித்து, உடனடியாக சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் கறுவாத்தோட்ட பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கை செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்