பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு

பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு

பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2017 | 12:36 pm

பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் அறிவிப்பின் பிரகாரம் நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பெற்றோலிய தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பொதுமக்கள் பாரிய அசளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கொலன்னாவையிலிருந்து எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று காலை முதல் தடைபட்டிருந்தது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக இன்று அதிகாலை வரை எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று எரிபொருளை பெற்றுக் கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், நாடளாவிய ரீதியில் எரிபொருளை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய பிரிவின் தலைவர் ஷெஹான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கப்பல்களிலிருந்து எரிபொருளை, சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடுகள் மாத்திரமே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஷெஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கையால் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியங்களின் ஏற்பாட்டாளர் டி.ஜே.ராஜகருனா குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை எரிபொருள் தாங்கித் தொகுதி மற்றும் சீனக்குடா எரிபொருள் தொகுதி ஆகியன இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் முன்வைத்துள்ளது.

மேலும், திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கும் ஒப்பந்தத்தை நிறுத்துமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்த அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் ஒன்றாகும்.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாடுமுழுவதும் எரிபொருள் விநியோக செயற்பாடுகள் ஸ்தம்பிதமடையும் என பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் டி.ஜே.ராஜகருனா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பிற்கு தாம் தயார் இல்லை என தேசிய தொழிலாளர் சங்கத்தின் பெற்றோலிய கூட்டுத்தாபன கிளையின் தலைவர் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் நாடு முழுவதும் எரிபொருள் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்களின் பிரச்சினை குறித்து இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொகை களஞ்சிய பிரிவின் தலைவர் ஷெஹான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கலந்தரையாடலில் ஈடுபட்டாலும் தங்களின் கோரிக்கைகு தீர்வு கிட்டாது என பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் டி.ஜே.ராஜகருனா கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், எண்ணெய் கொள்கலன்களை இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்படவில்லை என பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்