கல்குடாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: ஏனைய சந்தேகபர்களையும் கைது செய்யுமாறு உத்தரவு

கல்குடாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: ஏனைய சந்தேகபர்களையும் கைது செய்யுமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2017 | 7:10 pm

கல்குடாவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்ய வேண்டிய ஏனைய சந்தேகபர்களையும் கைது செய்யுமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீதே கும்புறுமுலை வேம்பு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கு வாழைசேனை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் இன்று (24) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டிருந்த ஆறுமுகம் தம்பிதுரை, ஆறுமுகம் ஜெயகாந்த் ஆகிய இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டில் 5 சந்தேகநபர்களுக்கு மேற்பட்டவர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாமைக்கான காரணம் என்னவென நீதிபதி பொலிஸாரிடம் வினவியுள்ளார்.

குற்றச் செயல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை குற்றமற்றவர்கள் என பொலிஸார் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என வினவிய நீதிபதி அதற்காகவே நீதிமன்றம் உள்ளதாவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்களை, இரண்டு சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்ததாகவும், ஒருவர் கம்பியால் தாக்கியதாகவும், மற்றுமொருவர் அவர்களை மறிக்க முயன்றதாகவும், சிலரை தாக்குதலுக்காக சந்தேகநபர்கள் அழைத்ததாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஊடக பிரசித்திக்காகவே இந்த முறைப்பாட்டினை ஊடகவியலாளர்கள் தாக்கல் செய்துள்ளதாக பொலிஸார் இதன்போது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அந்த விடயம் தனக்கு அநாவசியமானது என தெரிவித்த நீதிபதி, வீதியில் செல்வோர் மீது தாக்குதல் நடத்த காவலருக்கு என்ன அதிகாரமுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணை அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி, சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை பொலிஸாருக்கு தெரியாதா எனவும் வினவியுள்ளார்.

இந்த விசாரணைகளை பொலிஸார் முறையாக நடத்தவில்லை என்பது புலப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

வழக்கு தொடர்பில் கைது செய்ய வேண்டிய எவரேனும் இருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இதன்போது நீதிபதி ஏ.சி.றிஸ்வான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணி ரி.பிறேம்நாத் ஆஜராகியிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்