முத்துராஜவெலயில் குப்பைகளைக் கொட்டச்சென்ற வாகனத்தைத் தாக்கியவர் கைது

முத்துராஜவெலயில் குப்பைகளைக் கொட்டச்சென்ற வாகனத்தைத் தாக்கியவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2017 | 10:06 pm

கழிவகற்றல் செயற்பாடு அத்தியாவசியத் தேவையாக மாறியுள்ள நிலையில், முத்துராஜவெலயில் குப்பைகளைக் கொட்டச்சென்ற வாகனமொன்றைத் தாக்கியதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்துராஜவெலயில் குப்பைகளைக் கொட்ட வேண்டாம் என தெரிவித்து வத்தளை – போபிட்டிய – நுகபே பகுதியில் சிலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, கழிவுப்பொருட்களை ஏற்றிச்சென்ற லொறிகள் மறிக்கப்பட்டு, கற்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதேசத்தின் மதத்தலைவர்கள் சிலரும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டிருந்தனர்.

நுகபே பகுதியிலுள்ள சதுப்பு நிலத்தில் கொழும்பில் சேகரிக்கப்பட்ட குப்பைகளைக் கொட்டுவதற்கு சென்றிருந்த லொறிகளுக்கு இரண்டாவது நாளாக இன்றும் மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் கலந்துரையாடுவதற்காக சிலர் சென்றதை அடுத்து, குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

எனினும், அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பொலிஸாரின் தலையீட்டை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் கலந்துரையாடச் சென்றவர்கள் மீண்டும் குறித்த பகுதியை வந்தடைந்தனர்.

கலந்துரையாடல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மீண்டும் சில லொறிகள் குப்பைகளைக் கொட்டும் இடத்திற்கு வருகை தந்தன.

இதன்போது மக்கள் மீண்டும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்