மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட எழுவருக்கு அழைப்பாணை

மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட எழுவருக்கு அழைப்பாணை

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2017 | 7:52 pm

மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி உள்ளிட்ட 7 பேருக்கு எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கெஸ்பேவ பிரதம நீதவான் கிஹான் ரணவக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி, பொரலஸ்கமுவ நகர சபையின் முன்னாள் தலைவர் அருண பிரியஷாந்த, கெஸ்பேவ நகர சபையின் முன்னாள் தலைவர்களான சுமன விவியன் ரணவீர மற்றும் லக்ஷ்மன் பெரேரா உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச்சென்று அழைப்பாணையைக் கையளிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறு விளைவித்தமை, கரதியானவிற்கு சென்ற லொறிகளைத் திருப்பி அனுப்பியமை, அநாவசிய ஒன்றுகூடல் நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து வீழ்ந்த பின்னர் ஏற்பட்ட நிலைமையை கருத்திற்கொண்ட கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம், கொழும்பில் சேகரிக்கப்படும் 350 மெட்ரிக் தொன் கழிவுப்பொருட்களை ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வரை கரதியானவில் கொட்டுவதற்கு கடந்த 17 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

இந்த பின்புலத்திலேயே அழைப்பாணை விடுக்கப்பட்டவர்கள், நீதிமன்ற ஆணைக்கு எதிராக செயற்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்