வவுனியாவில் ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி

வவுனியாவில் ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2017 | 7:27 pm

வவுனியாவில் பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், வவுனியா ரயில் கடவையை ஊடறுத்து சென்ற மோட்டார் சைக்கிளொன்று ரயிலில் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா – பண்டாரிக்குளத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வவுனியா, மட்டக்களப்பு ரயில் கடவை ஊழியர்கள் தமக்கான நிரந்திர நியமனங்களை வழங்குமாறு கோரி தொடர்ந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, ரயில்வே திணைக்களத்திடம் ரயில் கடவை ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து நியூஸ்பெஸ்ட் வினவியது.

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் எவரும் ரயில்வே திணைக்களத்தின் கீழ் இணைத்துக்கொள்ளப்படவில்லை என ரயில்வே திணைக்கள பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்க காலப்பகுதியில் அவர்கள் பொலிஸ் திணைக்களத்தின் கீழேயே தற்காலிக அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த ஊழியர்கள் தொடர்பில் ரயில்வே திணைக்களத்திற்கு எவ்வித பொறுப்பும் கிடையாதெனவும் அவர் கூறினார்.

இதுதவிர, நாடளாவிய ரீதியில் எந்தவொரு பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியருக்கும் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்