மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு இன்று முதல் வீடுகள் வழங்கப்படவுள்ளன

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு இன்று முதல் வீடுகள் வழங்கப்படவுள்ளன

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு இன்று முதல் வீடுகள் வழங்கப்படவுள்ளன

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2017 | 7:35 am

மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்ததால், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இன்று முதல் வீடுகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கென கொழும்பு சாலமுல்ல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 65 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜகத் முனசிங்க தெரிவித்தார்.

முன்னுரிமை அடிப்படையில் இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

குப்பை மேடு சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள 98 குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை புதிதாக வீடுகள் வழங்கப்படுகின்ற சகல குடும்பங்களுக்கும், வீட்டுத் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக 250,000 ரூபா வழங்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

குப்பை மேடு சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குப்பை மேடு சரிவினால் காணாமற்போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் இதுவரை 32 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

முப்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மீட்புப்பணிகளை முன்னெடுப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்த தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்