கொழும்பு குப்பைகளை அகற்றுவதில் தொடர்ந்தும் இடையூறு

கொழும்பு குப்பைகளை அகற்றுவதில் தொடர்ந்தும் இடையூறு

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2017 | 8:43 pm

மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தத்தை அடுத்து, கழிவுப்பொருட்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் தற்போது பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

கொழும்பின் குப்பை அகற்றும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு விளைவிக்கப்படுகின்றமையே இதற்கான காரணமாகும்.

புத்தாண்டு மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக கொழும்பு நகர எல்லையில் நாளாந்தம் 150 – 200 மெட்ரிக் தொன் குப்பை சேகரிக்கப்படுவதாக நகர ஆணையாளர் தெரிவித்தார்.

கொழும்பில் சேகரிக்கப்பட்ட குப்பையில் ஒரு பகுதியை தொம்பே, மாளிகாவத்தை மீள் சுழற்சி மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்ல இன்று முயற்சித்த போது, தொம்பே முன்னாள் பிரதேச சபை தலைவர் திலான் ஜயதிலக்க உள்ளிட்ட சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மக்களின் எதிர்பைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவர பொலிஸார் முயற்சி செய்தனர்.

பின்னர் கொழும்பு மாநகர சபையின் குப்பை ஏற்றிய 9 லொறிகள் அங்கு சென்ற போது, மக்கள் இடையூறு விளைவித்தனர்.

பொலிஸாருக்கு உதவ பொலிஸ் விசேட அதிரடிப்படை அழைக்கப்பட்ட போது, அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இன்று மாலை வேளையிலும் அங்கு குப்பைகளைக் கொட்டுவதற்கு மக்கள் இடமளிக்கவில்லை.

எனவே, மக்களை அங்கிருந்து கலைப்பதற்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை, கொழும்பு குப்பைகளை முத்துராஜவெல சதுப்பு நிலப்பகுதியில் கொட்டத் திட்டமிடப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஜா – எல பாலத்திற்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்விடத்திற்கும் பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

கரதியான பகுதிக்கு குப்பைகளை எடுத்துச்சென்ற லொறிகள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டன.

எனினும், 350 தொன் கழிவுப்பொருட்கள் இன்று கரதியான கழிவகற்றல் நிலையத்தில் கொட்டப்பட்டுள்ளன.

கழிவு முகாமைத்துவம் இலங்கையில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

மேல் மாகாணத்தில் மாத்திரம், ஒரு நாளைக்கு சுமார் 3500 மெட்ரிக் தொன் கழிவுப்பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.

இது நாட்டில் மொத்தமாக சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்களின் 88 வீதமாகும்.

உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக இங்கு 2400 மெட்ரிக்தொன் கழிவுப்பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்களில் 15 வீதம் கொம்பொஸ்ட் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதுடன், 10 வீதம் மீள் சுழற்சி செய்யப்படுகின்றது.

75 வீதமான கழிவுப்பொருட்கள் பகிரங்க இடங்களில் கொட்டப்படுகின்றன.

இலங்கையில் நாளாந்தம் குவியும் கழிவுப்பொருட்களில் பிரதேசத்திற்கு பிரதேசம் சிறிய வித்தியாசங்கள் காணப்பட்டாலும், 65 முதல் 66 வீதமான கழிவுப்பொருட்கள் உக்கும் மற்றும் காபன் கழிவுப்பொருட்களாகும்.

பல இடங்களில் கழிவுப்பொருட்கள் முகாமைத்துவ மத்திய நிலையங்கள் உரிய முறையில் செயற்படுவதில்லை என்பதுடன், சில பகுதிகளில் ஆங்காங்கே கழிவுப்பொருட்கள் கொட்டப்படுகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்