திசைமாறிப் பாய்ந்த சிலிம்ஸ் நதி: காரணத்தைக் கண்டறிந்தது ஆய்வுக்குழு

திசைமாறிப் பாய்ந்த சிலிம்ஸ் நதி: காரணத்தைக் கண்டறிந்தது ஆய்வுக்குழு

திசைமாறிப் பாய்ந்த சிலிம்ஸ் நதி: காரணத்தைக் கண்டறிந்தது ஆய்வுக்குழு

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2017 | 3:36 pm

பருவநிலை மாற்றம் காரணமாக கனடாவின் சிலிம்ஸ் நதி திசைமாறிப் பாய்ந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவின் யுகோன் பிரதேசத்தில் சிலிம்ஸ் நதி பாய்கிறது. இந்த நதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த நதி திடீரென தான் செல்லும் திசையை மாற்றிக்கொண்டது. அதன் வழக்கமான பாதை நான்கு நாட்கள் நீரின்றி வற்றிவிட்டது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

நதியின் இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின், கனடாவைச் சேர்ந்த பூகோள ஆராய்ச்சியாளர் டேனியர் ஷூகர் தலைமையில் பேராசிரியர் மற்றும் ஆய்வுக்குழுவின் இணை ஆசிரியர் கிரார்ட் ரோ அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

தற்போது இந்த ஆய்வுக்குழு தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், சிலிம்ஸ் நதியின் முகத்துவாரத்தில் கஸ்காவுல்ஸ் என்ற மிகப்பெரிய பனிப்பாறை இருந்ததாகவும் இந்த பனிப்பாறை திடீரென உருகியதால் ஏற்பட்ட நீர் வேறு திசையில் பசிபிக் பெருங்கடலை நோக்கிச் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பனிப்பாறை நீர் செல்லும் திசையிலேயே சிலிம்ஸ் நதியின் நீரோட்டமும் திரும்பியுள்ளது. இதன் காரணமாகத் தான் கடந்த ஆண்டு 4 நாட்கள் சிலிம்ஸ் நதி வற்றியுள்ளது. பனிப்பாறை உருகியதே சிலிம்ஸ் நதியில் ஏற்பட்ட மாற்றத்திற்கு பிரதான காரணமாகும்.

பருவநிலை மாற்றம் காரணமாக, பனிப்பாறை இருந்த இடத்தில் திடீரென வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதனால் பனிப்பாறை திடீரென உருகி ஓடியுள்ளது. அதுவே நதியின் போக்கையும் மாற்றியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் நிலவுவதை சிலிம்ஸ் நதியின் போக்கு உணர்த்துகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்