கழிவுப்பொருட்கள் அகற்றும் நடவடிக்கையை அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு

கழிவுப்பொருட்கள் அகற்றும் நடவடிக்கையை அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு

கழிவுப்பொருட்கள் அகற்றும் நடவடிக்கையை அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2017 | 10:41 pm

அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் கழிவுப்பொருட்கள் அகற்றும் நடவடிக்கையை அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேட வர்த்தமானி ஊடாக உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 17 ஆவது சரத்திற்கு அமைய, ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, உள்ளூராட்சி மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் கழிவுப்பொருள் அகற்றல், சேகரித்தல், தற்காலிகமாகக் களஞ்சியப்படுத்தல், வேறுபடுத்தல், தெருக்கள் – வீடுகளில் உள்ள கழிவுப்பொருட்களை அகற்றல் ஆகியவை தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் இந்த உத்தரவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நபருக்கோ சொத்துக்களுக்கோ எவரேனும் ஒருவர் பாதிப்பை ஏற்படுத்துதல், அச்சுறுத்தல், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அவருக்கு இடையூறு விளைவித்தல் குற்றமாகக் கருதப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அழுத்தம் விடுத்தல், தொழிலில் இருந்து விலகுமாறு அச்சுறுத்தல் விடுத்தல் ஆகியனவும் சட்டத்திற்கு விரோதமானவை என அதில் கூறப்பட்டுள்ளது.

எவருக்கேனும் உடல் ரீதியாகவோ வாய்மூலமாகவோ எழுத்து மூலமாகவோ அச்சுறுத்தல் விடுத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைய, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என சந்தேகிப்பதற்கு நியாயமான காரணம் இருந்தால், எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் பிடியாணை இன்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்ய முடியும்.

வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட ஒருவர், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர், கடுழீய சிறைத்தண்டயை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்