எதிர்வரும் 2 வாரங்களில் அரச திணைக்களங்களில் பாரிய மாற்றங்கள் – ஜனாதிபதி

எதிர்வரும் 2 வாரங்களில் அரச திணைக்களங்களில் பாரிய மாற்றங்கள் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2017 | 12:52 pm

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு, அறிக்கை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இதன் மூலம் எவரேனும் தவறிழைத்தமை உறுதிசெய்யப்படுமாயின், தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு பின்நிற்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கணக்காய்வு சட்டமூலத்தை விரைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை விடுக்கவுள்ளதாக இந்த சந்திப்பின்போது குறிப்பிட்ட ஜனாதிபதி, தமது தேர்தல் வாக்குறுதியான கணக்காய்வு சட்டத்தை கொண்டுவருவதில் தாமதம் நிலவியுள்ளமைக்கு கவலையை தெரிவித்தார்.

அரச சேவையை வினைதிறனுடன் முன்னெடுக்கும் நோக்கில், எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அரச நிறுவனங்கள் பலவற்றின் உயர்பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்போவதாகவும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை தனிமனித உரிமையிலிருந்து நீக்கி, அதன் பங்குகளை மக்களும் கொள்வனவு செய்யக்கூடிய நிலைமையை உருவாக்குமாறு நிர்வாகத் தரப்பிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

அத்துடன் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் அறவிடப்படும் பணத்திற்கு சலுகை வழங்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்