லசந்த கொ​லை: முன்னாள் பாதுகாப்புப் படை பிரதானி, மேஜர் ஜெனரல்கள் இருவரிடம் வாக்குமூலம் பதிவு

லசந்த கொ​லை: முன்னாள் பாதுகாப்புப் படை பிரதானி, மேஜர் ஜெனரல்கள் இருவரிடம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

18 Apr, 2017 | 8:18 pm

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில், முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி எயார் சீஃப் மார்ஷல் டொனல்ட் பெரேராவிடமும் முன்னாள் மேஜர் ஜெனரல்கள் இருவரிடமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று வாக்குமூலம் பதிவு செய்தது.

எயார் சீஃப் மார்ஷல் டொனல்ட் பெரேரா மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல்களான மனோ பெரேரா, எச்.எம்.எச்.ஏ.ஹேரத் ஆகியோரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று முற்பகல் நேரடி வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், மேஜர் ஜெனரல் எச்.எம்.எச்.ஏ.ஹேரத் ஒன்றிணைந்த நடவடிக்கை தலைமையகத்தின் பணிப்பாளராகவும் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா கொழும்பு மாவட்ட நடவடிக்கை பணிப்பாளராகவும் செயற்பட்டார்.

இதற்கு முன்னர் இவர்கள் மூவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலங்களில் காணப்பட்ட முரண்பாடு காரணமாக ஒன்றிணைந்த வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக இன்றைய தினம் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளாகிய இவர்களுக்கு, அவர்களின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில், வாகனத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள வளாகத்தினுள் பிரவேசிக்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன.

எனினும், அதனை நிராகரித்து மேஜர் ஜெனரல் எச்.எம்.எச்.ஏ.ஹேரத் வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்தார்.

வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், வாகனத்தைப் பாவிக்காமல் மேஜர் ஜெனரல் எச்.எம்.எச்.ஏ.ஹேரத் நடந்து சென்றே ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்