மீதொட்டமுல்லயை அண்மித்த மற்றுமொரு பகுதி பாதுகாப்பற்ற பிரதேசமாக அறிவிப்பு

மீதொட்டமுல்லயை அண்மித்த மற்றுமொரு பகுதி பாதுகாப்பற்ற பிரதேசமாக அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2017 | 12:50 pm

மீதொட்டமுல்ல பகுதியில் குப்பைமேடு சரிவு ஏற்பட்ட பகுதியை அண்மித்த மற்றுமொரு பகுதியும் பாதுகாப்பற்ற பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தம் தொடர்பான ஆய்வுகளுக்காக பேரதானை பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர்கள் மூவர் உள்ளிட்ட 7 பேரும், அரச இராசாயன பகுப்பாய்வாளர், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவக பிரதிநிதி என பலர் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அனர்த்தம் ஏற்பட்ட இடத்தை இந்த குழுவினர் தொடர்ந்தும் கண்காணித்து வருவதுடன், குப்பை மேடு சரிவுக்கான காரணம் தொடர்பாகவும் ஆராய்ந்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இந்த நிலைமையின் கீழ், குப்பை மேடு சரிவு ஏற்பட்ட பகுதியை அண்மித்து மற்றுமொரு பகுதியிலும் அபாயம் நிலவுவதை இந்த குழுவினர் அவதானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளரான பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த ஜயகொடி குறிப்பிட்டார்.

பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தலைமையிலான பொலிஸ் குழுவொன்றும் அந்த பகுதியில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குப்பை மேடு சரிவினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் நோய்கள் பரவுவதை தடுப்பதற்கான திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த ஜயகொடி குறிப்பிட்டார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்