இலங்கை, வியட்நாமிற்கு இடையில் 2 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து

இலங்கை, வியட்நாமிற்கு இடையில் 2 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து

எழுத்தாளர் Staff Writer

17 Apr, 2017 | 8:15 pm

இலங்கை மற்றும் வியட்நாமிற்கு இடையில் எதிர்வரும் சில வருடங்களில் வர்த்தக ரீதியான கொடுக்கல் வாங்கல்களை ஒரு பில்லியன் ரூபா வரை அதிகரித்துக் கொள்வதற்கு இருநாட்டு பிரதமர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

வியட்நாமிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, அந்த நாட்டின் தலைநகர் ஹெனோயில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இராணுவ அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

இதன்போது வியட்நாம் பிரதமர் குயேன் ஷுஎன் ஃபூ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வரவேற்பளித்தார்.

இரண்டு பிரதமர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அரச மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்புகளை அதிகரித்தல் தொடர்பிலும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மீளாய்வு செய்து, இருதரப்புக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுவூட்டுவதற்கான நிலையான அமைப்பொன்றை ஏற்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் சீனக் கடற்பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பாக கலந்துரையாடியுள்ள இருநாட்டு பிரதமர்களும், சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாக அமைதியான செயற்பாடொன்றின் ஊடாக இதற்குத் தீர்வுகாணப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கைக்கும், வியட்நாமிற்கும் இடையிலான இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டன.

2017 – 2019 ஆண்டு காலப்பகுதிக்கான விவசாய அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு கருதி செயற்திறனான திட்டங்களை முன்னெடுப்பதற்கான உடன்படிக்கையில் வியட்நாம் விவசாய அமைச்சர் சவோ டூட் ஃபட் மற்றும் கல்வி ஒத்துழைப்பிற்கான உடன்படிக்கையில் அந்த நாட்டின் கல்வியமைச்சர் ஃபம் லூ லுவன் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கை சார்பாக வியட்நாமிற்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திசாநாயக்க கைச்சாத்திட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வியட்நாம் சோஷலிச குடியரசின் வீர ஸ்தூபிக்கும் மலரஞ்சலி செலுத்தினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்