கொலன்னாவை குப்பை மேடு சரிந்ததில் அறுவர் காயம்: நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொலன்னாவை குப்பை மேடு சரிந்ததில் அறுவர் காயம்: நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2017 | 8:34 pm

கொலன்னாவை – மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்தமையினால் காயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் போது 50 ற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குமாறு முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மீதோட்ட முல்ல குப்பை மேட்டின் ராகுல கல்லூரி பகுதியிலான பிரதேசத்தில் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் சரிவு ஏற்பட ஆரம்பித்துள்ளது.

குப்பை மேட்டில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் பிரதேச மக்கள், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபட்டனர்.

பல தடவைகள் குப்பைமேடு சரிந்தமையினால் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்தமையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு இடர் முகாமைத்துவ அமைச்சர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டனர்.

சம்பவத்தைப் பார்வையிட அவ்விடத்தினை நெருங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பை மேட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அது இடையூறாக அமையும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்றும் மீதொட்டமுல்ல பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்