கடும் காற்றினால் 62 வீடுகள் சேதம்: மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது

கடும் காற்றினால் 62 வீடுகள் சேதம்: மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2017 | 8:48 pm

நேற்று (13) மாலை நாட்டின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் 62 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதேவேளை கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழையை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

அடுத்து வரும் சில மணித்தியாலங்களுக்கான வானிலை எதிர்வுகூறலை இன்று மதியம் வெளியிட்டுள்ளது.

கொழும்பு முதல் காலி வரையும், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையும் உள்ள கடற்பிராந்தியங்களில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

கடும் காற்று வீசும் சந்தர்ப்பங்களில் கடற்பிராந்தியங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாக திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான முன்னெச்சரிக்கை நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு கிழக்கேயுள்ள வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தாழமுக்க வலயத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக இந்த நிலைமை உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் 44 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

காலி பத்தேகம – அம்பேவத்த பிரதேசத்தில் வீசிய கடும் காற்றினால் 6 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்டத்தின் பிபில – யக்குனாவ – கனுள்வெல உள்ளிட்ட கிராமங்களிலும் பலத்த காற்றினால் சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்