25 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் பட்டதாரிகளுக்கு தீர்வு கிட்டவில்லை

25 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் பட்டதாரிகளுக்கு தீர்வு கிட்டவில்லை

எழுத்தாளர் Bella Dalima

12 Apr, 2017 | 8:51 pm

தடைகளைத் தாண்டி பட்டதாரிகளாக உருவாகியுள்ளவர்களின் போராட்டம் 50 நாட்களைக் கடந்துள்ளது.

தாம் தெரிவு செய்த அரசியல்வாதிகள் தமது பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாமை கவலையளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

யாழ். மாவட்ட பட்டதாரிகளின் போராட்டம் இன்று 45 ஆவது நாளைக் கடந்துள்ள நிலையில், அவர்கள் இன்று அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 51 ஆவது நாளாகவும் பட்டதாரிகள் தமக்கான நியமனங்களைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மழை, வெயில் பாராமல் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் 45 ஆவது நாளாகவும் திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள் 42 ஆவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வட மாகாணத்தில் சுமார் 3000 பட்டதாரிகளும் கிழக்கு மாகாணத்தில் சுமார் 8,500 பட்டதாரிகளும் தொழிலுக்காக காத்திருந்திருக்கின்றனர்.

13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் ஊடாக பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கு மாகாண சபைக்கு அதிகாரம் உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர வீ. இராதாகிருஷ்னண் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர்களை பல வழிகளில் தொடர்புகொள்ள நியூஸ்பெஸ்ட் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பாராளுமன்ற உறுப்பினர்களும் 61 மாகாண சபை உறுப்பினர்களும் உள்ள நிலையில், பட்டதாரிகளின் போராட்டத்திற்கு இன்னும் முடிவு கிடைக்காமை கவலைக்குரியதே.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்