ஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் பயணித்த பஸ் அருகே குண்டுவெடிப்பு

ஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் பயணித்த பஸ் அருகே குண்டுவெடிப்பு

ஜெர்மனியில் கால்பந்து வீரர்கள் பயணித்த பஸ் அருகே குண்டுவெடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

12 Apr, 2017 | 3:29 pm

ஜெர்மனியில் கால்பந்து அணி வீரர்கள் பயணித்த பஸ் அருகே 3 வெடிகுண்டுகள் வெடித்ததில் கால்பந்து வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஜெர்மனியின் டார்ட்மண்ட் நகரில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் கால் இறுதிப் போட்டி நேற்றிரவு நடக்கவிருந்தது.

இப்போட்டியில் உள்ளூர் அணியான புருசியா டார்ட்மண்ட்டும் மொனாகோ அணியும் மோதவிருந்தன.

இதற்காக அரங்கத்தில் சுமார் 80,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியிருந்தனர்.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக, டார்ட்மெண்ட் அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து சொகுசு பஸ்ஸில் புறப்பட்டனர்.

பஸ் புறப்பட்டு சிறிது தொலைவில் சென்றதும், பஸ்ஸின் அருகில் 3 வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின.

இதில், பஸ்ஸிலிருந்த ஸ்பெயின் வீரர் மார்க் பர்தரா படுகாயமடைந்தார்.

தகவலறிந்த பொலிஸார் விரைந்து சென்று காயமடைந்த வீரரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மற்ற வீரர்கள் பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்டு பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. குண்டு வெடிப்புக்கான காரணங்கள் தெரியவில்லை.

இச்சம்பவம் ஜெர்மனியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து வீரர்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் பெறப்பட்ட கடிதத்தில் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுக்கு தாக்குதலுடன் தொடர்பிருப்பதாக சந்தேகிப்பதாகவும், எவ்வாறாயினும் நாசிகளுக்கு எதிரான குழுக்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்