கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஓடுபாதை உரிய முறையில் புனரமைக்கப்பட்டுள்ளதா?

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஓடுபாதை உரிய முறையில் புனரமைக்கப்பட்டுள்ளதா?

எழுத்தாளர் Bella Dalima

12 Apr, 2017 | 8:13 pm

ஓடுபாதை புனரமைப்பிற்காக கடந்த ஜனவரி 6 ஆம் திகதி முதல் 3 மாதங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

இந்த காலப்பகுதியில் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

புனரமைப்புத் திட்டத்தின் ஊடாக விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை 45 மீட்டரில் இருந்து 75 மீட்டராக விஸ்தரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதுடன், உப ஓடுபாதை புனரமைக்கப்படும் எனவும் சமிக்கை கட்டமைப்பு மீண்டும் ஸ்தாபிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இதற்காக 7.2 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் 4F சான்றிதழ் பெறப்படவில்லை.

பெரிய விமானங்களைத் தரையிறக்குவதற்கு விமான நிலையங்கள் 4F சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என சர்வதேச சிவில் விமான சேவை நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓடுபாதையில் Shoulders எனப்படும் தோள் பகுதியை விஸ்தரிப்பது முக்கியமானது எனவும் ஏனைய நாடுகளைப் போல் தாமும் அந்த நடைமுறையைப் பின்பற்றியதாகவும் சிவில் விமான சேவை பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமல்சிறி தெரிவித்தார்.

விமான நிலையம் மூடப்பட்டதால் 760 கோடி நட்டம் ஏற்பட்டுள்ள போதும், 380 ரக விமானத்தை தரையிறக்கவும் முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் எதிர்பார்த்த விடயங்கள் பூர்த்தியாகவில்லை என்பது தெளிவாவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தினமும் 16 மணித்தியாலங்களை ஓடுபாதை புனரமைப்பிற்கு வழங்கிய போதும் பெரிய விமானங்களை தரையிறக்க முடியாவிட்டால் இதுவொரு பாரிய நட்டமாகும் என ஶ்ரீலங்கா சுதந்திர சேவை சங்கம் மற்றும் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் ஜானக விஜேபத்திரத்ன குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு சர்வதேச சிவில் விமான சேவை நிறுவனத்தின் 4F சான்றிதழ் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்