இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளை ஒருங்கிணைக்க விசேட பிரதிநிதியை நியமிக்கிறது ஜப்பான்

இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளை ஒருங்கிணைக்க விசேட பிரதிநிதியை நியமிக்கிறது ஜப்பான்

எழுத்தாளர் Bella Dalima

12 Apr, 2017 | 7:13 pm

இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கு விசேட பிரதிநிதியொருவரை நியமிப்பதாக ஜப்பான் அமைச்சரவை செயலாளர் யொஷிஹதே சுகா தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமரின் ஆலோசகர் கலாநிதி ஹிரோதோ இசுமியை இதற்காக நியமிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று காலை சந்தித்த போது அவர் அறிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இந்து சமுத்திர வலயத்தின் கடற்போக்குவரத்து, சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தொலைக்காட்சி டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு எக்ஸ்போ கண்காட்சியை ஜப்பானின் ஒசாகா நகரில் நடத்துவதற்கு இலங்கை பூரண ஒத்துழைப்பை வழங்குமென இதன்போது இலங்கை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, பிரதமர் உள்ளிட்ட குழுவினர் ஜப்பானின் துணை பிரதமரும் நிதி அமைச்சருமான தாரா அசோவை சந்தித்தனர்.

இலங்கையின் பொருளாதாரம் நிலையாக முன்னோக்கிச் செல்வது தொடர்பில் பாராட்டு தெரிவித்த துணை பிரதமர், எதிர்காலத்திலும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து, தகுந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

ஜப்பான் – இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை ஸ்தாபிப்பது, கொழும்பு வட பகுதி துறைமுக அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்திற்கும் ஜப்பான் சுய பாதுகாப்பு படைப்பிரிவிற்கும் இடையேயான தொடர்புகளை நெருக்கமாக பேணுதல், கடற்பாதுகாப்பு, இந்து சமுத்திரத்தின் அமைதியைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல விடயங்களில் பொதுவான அடிப்படையில் செயற்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தொமொமி இனதா, பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கை கடற்படை தளபதியின் உத்தியோகப்பூர்வ ஜப்பான் விஜயத்தின் போது இது தொடர்பில் மேலதிகமாக கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திர வலயத்தின் அமைதியையும் சமுத்திர பாதுகாப்பையும் உறுதி செய்தல் இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான கொள்கை எனவும், அதனைப் பாதுகாப்பதற்கு இரண்டு நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இந்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்