ஸ்ரீ பொன்னம்பல வானேஸ்வரர் ஆலய இரதோற்சவம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது

ஸ்ரீ பொன்னம்பல வானேஸ்வரர் ஆலய இரதோற்சவம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2017 | 7:54 pm

வரலாற்று சிறப்புமிக்க கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பல வானேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் இரதோற்சவம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இரதோற்சவப் பெருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

சோழர்களால் கட்டுவிக்கப்பட்ட கொழும்பு ஸ்ரீ பொன்னம்பல வானேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த மாதம் 31 ஆம் திகதி கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது.

வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவில் சிறப்பிடம் பெறுகின்ற இரதோற்சவப் பெருவிழா இன்று (08) காலை இடம்பெற்றது.

ஸ்ரீ சிவகாம சௌந்தரியம்பாள் சமேத ஸ்ரீ சொர்ண சபேஸ்வரப் பெருமான் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு இன்று காலை விசேட பூஜைகள் இடம்பெற்றதை அடுத்த வசந்த மண்டப பூஜை நடைபெற்றது.

அதனை அடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க, பிராமண உத்தமர்களின் வேத மந்திர உச்சாடனத்துடன், ஸ்ரீ சிவகாம சௌந்தரியம்பாள் சமேத ஸ்ரீ சொர்ண சபேஸ்வரப் பெருமான் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் பக்தர்கள் புடைசூழ ஆலயத்தின் உள்வீதியை வலம் வந்தனர்.

உற்சவ மூர்த்திகள் இரதங்களில் ஆரோகணிக்கப்பட்டதை அடுத்து, இரதபவணி ஆரம்பமானது.

இதன்போது பக்தர்கள் சிதறு தேங்காய்களை உடைத்து தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா, நாளை நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்