மீனவர் பிரச்சினைக்கு இந்திய அரசு சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது – கடற்றொழில் அமைச்சு

மீனவர் பிரச்சினைக்கு இந்திய அரசு சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது – கடற்றொழில் அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2017 | 7:27 pm

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில், இந்திய அரசு சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இருநாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகள் மட்ட பேச்சுவார்தை கொழும்பில் நேற்று (07) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில், இருநாட்டு கடற்றொழில் அமைச்சுக்களினதும் பிரதிநிதிகள், கரையோர பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் கடற்படையின் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

இதன்போது மீனவர் பிரச்சினை தொடர்பில் இருநாட்டு அரசுகளும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.

இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இழுவை படகு முறையை படிப்படியாக குறைப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்றைய பேச்சுவார்தையின் போது கூறியுள்ளனர்.

அதற்கமைய புதிய படகுகளை பதிவு செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இழுவை படகுகளை ஏனைய கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாகவும் இந்திய பிரதிநிதிகள் நேற்றைய பேச்சுவார்தையின் போது தெரிவித்துள்ளனர்.

இருநாட்டு மீனவர் பிரச்சினைக் குறித்து தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு, சில தீர்மானங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சு கூறியுள்ளது.

அதற்கமைய , அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை இந்தியாவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை கடல் எல்லைக்குள் கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும், தடுத்து வைக்கப்படும் மீனவப் படகுகள் விடுவிக்கப்படமாட்டாது எனவும் பேச்சுவார்தையின் போது இலங்கை சார்பில் குறிப்பிடப்பட்டதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இருநாட்டு ஒத்துழைப்புடனும் மீனவர் பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்கு நேற்றைய பேச்சுவார்த்தையின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்