இறக்காமத்தில் உணவு விசமானதால் பாதிக்கப்பட்ட 465 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

இறக்காமத்தில் உணவு விசமானதால் பாதிக்கப்பட்ட 465 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2017 | 7:14 pm

அம்பாறை – இறக்காமம் பகுதியில் கடந்த புதன் (05) கிழமை இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் உணவு விசமானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 465  பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறக்காமம் – வாங்காமம் பகுதியில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வின் போது வழங்கப்பட்ட உணவு விசமடைந்ததன் காரணமாக சுமார் 900 பேர் வரை பாதிக்கப்பட்ட நிலையில் இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

அதன்பின்னர் வைத்தியசாலையில் நோயாளிகளை தங்க வைத்து சிகிச்சை அளிப்பதற்கு போதிய வசதியின்மையினால் அருகில் உள்ள அம்பாறை பொது வைத்தியசாலை, கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

அம்பாறை பொது வைத்தியசாலை மற்றும் சம்மாந்துரை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூவரே உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அலாவுதீன் தெரிவித்துள்ளார்.

எனினும் 465  பேருக்கு தீவிர சிகிச்கை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவு விசமானதினால் சிறுவர், வயோதிபர் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகவீனமடைந்த நோயாளர்கள் உட்கொண்ட உணவு மாதிரி இரசாயன பகுப்பாய்விற்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொகடர் அலாவுதீன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வாங்காமம் அன்னதான நிகழ்வில் உணவு விசமானது தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது .

இதன் போது கிழக்கு மாகாண உறுப்பினர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் இறக்காமம் பிரதேச வைத்தியசாலைக்கு சென்று நோயளிகளின் நிலமை தொடர்பில் அறிந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்றிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்