அரசியல் தீர்வு வழங்கும்போது ஜனாதிபதியின் அதிகாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

அரசியல் தீர்வு வழங்கும்போது ஜனாதிபதியின் அதிகாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

எழுத்தாளர் Bella Dalima

06 Apr, 2017 | 7:18 pm

வடக்கு, கிழக்கிற்கு அரசியல் தீர்வினை வழங்கும் போது ஜனாதிபதியின் அதிகாரங்களும் மத்திய அரசாங்கத்தின் பிணைப்பும் பாதுகாக்கப்பட வேண்டும் என மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் சங்க சபை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

21 விடயங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை சங்க சபை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.

மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் அணுநாயக்க தேரர்கள், பதிவாளர்கள் உள்ளடங்கலான சங்க சபையினர் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து நேற்று (05) நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்வதாக இருந்தால், அது குறித்து மகாநாயக்க தேரர்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் சங்க சபை ஜனாதிபதியிடம் கையளித்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் தேர்தல் முறைக்கு பதிலாக கலப்பு தேர்தல் முறை அவசியம் என இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இன மத பேதமின்றி இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் சில காணிகளை நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை சிந்திக்குமாறும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நல்லிணக்க சபை முன்னெடுக்கும் திட்டங்களின் நோக்கங்கள் தொடர்பில் தமக்கு தெளிவுபடுத்துமாறும் வர்த்தமானி வெளியிடப்படாத சரணாலயங்களை வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வருமாறும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய மட்டத்தில் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுத்து, பாடசாலைக்கல்வியில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளுமாறும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் கண்டி நகரை அண்மித்த பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இவர்கள் ஜனாதிபதியைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்