கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள காணி குத்தகை ஒப்பந்தத்தில் மோசடி

கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள காணி குத்தகை ஒப்பந்தத்தில் மோசடி

எழுத்தாளர் Bella Dalima

29 Mar, 2017 | 8:38 pm

கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள சுமார் இரண்டு ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு இன்றளவில் 50 வருட காலத்திற்கான உரிமத்திற்காக, நிறுவனமொன்றால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான குத்தகை ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு முன்னதாக நவம்பர் 17 ஆம் திகதி நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரால், சர்ச்சைக்குரிய நிறுவனத்தின் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள காணிக்குத்தகைக்கான கடிதம், பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை குழு, காணியை குத்தகைக்கு விடுவதற்காக வழங்குகின்ற சலுகைகளின் தன்மையை எடுத்தியம்பும் ஒன்றாகக் காணப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய நிறுவனத்திற்கு குறிப்பிட்ட காணியை குத்தகைக்கு விடும் தீர்மானம் மிகவும் பிழையானதாகும்.

அந்த நிறுவனம் 2013 இலேயே காணியை 50 வருட குத்தகைக்குப் பெற்றுக்கொண்டு, அது முதல் 2016 வரையில் அதன் மதிப்பீட்டுப் பெறுமதியில் 20 வீதத்தையே செலுத்தியுள்ளது.

மதிப்பீட்டுப் பெறுமதி 2785 மில்லியன் ரூபாவாக இருக்கையில், 20 வீதமான 557 மில்லியன் ரூபாவையே அந்த நிறுவனம் செலுத்துகிறது.

இதற்கமைய, அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய 2208 மில்லியன் நிலுவையையும் அதற்கான வட்டியையும் செலுத்த வேண்டியுள்ள நிலையில், 557 மில்லியன் ரூபாவையே குறிப்பிட்ட நிறுவனம் செலுத்தியுள்ளது.

இந்த தொகைக்கான 12 வீத வட்டியான 330 மில்லியன் ரூபாவை செலுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை இணங்கியுள்ளது.

அந்த 330 மில்லியன் ரூபாவை நிறுவனம் செலுத்திய 557 மில்லியன் ரூபாவான 20 வீத தொகையுடன் கூட்டிய பின்னர், 887 மில்லியன் ரூபாவை காணியின் தற்போதைய மதிப்பீட்டிலிருந்து கழித்து கடந்த பெப்ரவரி மாதம் குத்தகை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அவ்வாறாயின், 3620 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த காணியை சர்ச்சைக்குரிய நிறுவனத்திற்கு 2733 மில்லியன் ரூபாவிற்கே குத்தகைக்கு வழங்கியுள்ளனர்.

மக்கள் உடைமையொன்றின் மூலம் வருமானமாக வரக்கூடிய 887 மில்லியன் ரூபாவை, அரசாங்கத்திற்கு மோசடி செய்து நெருங்கிய நண்பர்களை ஆற்றுப்படுத்துவதற்காக வழங்கும் வரத்தைப் பொருளாதாரம் தொடர்பான அமைச்சரவைக்குழுவிற்கு வழங்கியது யார்?

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்