ரவிராஜ் கொலை: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியைப் பெறுமாறு உத்தரவு

ரவிராஜ் கொலை: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியைப் பெறுமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

28 Mar, 2017 | 6:34 pm

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்ட கடற்படை உறுப்பினர்கள் மூவரது வசிப்பிடங்களைக் கண்டறிவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டது.

குறித்த கடற்படை உறுப்பினர்கள் மூவரும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டு, மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

ரவிராஜ் படுகொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடுமாறு கோரி, சசிகலா ரவிராஜ், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மீளாய்வு மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான எச்.ரி.ஜே. மடவல மற்றும் எல்.சீ.டீ. தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரரான சசிகலா சார்பாக சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

ரவிராஜ் கொலை வழக்கில் விடுதலை பெற்றுள்ள கடற்படை உறுப்பினர்கள் மூவரினதும் வதிவிடங்களைக் கண்டறிய முடியாதுள்ளதால், அவர்களிடம் நீதிமன்ற அறிவித்தலைக் கையளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.

மனுதாரர் தரப்பு சட்டத்தரணியின் காரணங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனு தொடர்பான விசாரணையை ஜூன் மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்