டெங்கு காய்ச்சலினால் 40 பேர் உயிரிழப்பு: இன்ப்ளுயன்சா குறித்து அச்சமடையத் தேவையில்லை

டெங்கு காய்ச்சலினால் 40 பேர் உயிரிழப்பு: இன்ப்ளுயன்சா குறித்து அச்சமடையத் தேவையில்லை

எழுத்தாளர் Bella Dalima

28 Mar, 2017 | 8:30 pm

இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலைத் தவிர, இன்ப்ளுயன்சா H1N1 வைரஸ் காய்ச்சலும் பல பகுதிகளில் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்தது.

நாடளாவிய ரீதியில் இன்ப்ளுயன்சா H1N1 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியது.

மூன்று பிரிவுகளின் கீழ் இன்ப்ளுயன்சா வைரஸ் பரவுவதாகவும், ஏ பிரிவிலேயே அதிக நோயாளர்கள் பதிவாவதாகவும் வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

ஏ பிரிவின் கீழ் H1N1 வைரஸினால் பாதிக்கப்பட்ட 4 வீதமானவர்கள் பதிவாகின்றனர்.

ஏனைய பிரிவுகளின் கீழ் பதிவாகுபவர்கள் சாதாரணக் காய்ச்சலுக்குள்ளானவர்கள் என விசேட வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களே இன்ப்ளுயன்சா வைரஸினால் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.

இதேவேளை, இன்ப்ளுயன்சா H1N1 வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் அச்சமடைய வேண்டியதில்லை என சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி, மே, ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த வைரஸ் தொற்று ஏற்படும் என அமைச்சு சுட்டிக்காட்டியது.

சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனை, மருத்துவப் பரிசோதனை, நோய் எதிர்ப்பு மருந்துப்பொருட்கள், உபகரணங்கள் ஆகியன சுகாதார நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதேவேளை, காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு சில மருத்துவ உபகரணங்களை இன்று மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் வழங்கி வைத்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்